Sunday, March 19, 2017

Dinamalar Article

Article in Dinamalar (19/03/17)
Dr.M.Kumaresan research on Snoring

குறட்டையை விரட்ட முடியும்!
குறட்டை குறித்து கூறும், காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர் குமரேசன்: உடம்பு மிகவும் சோர்வாக இருந்தால் தான், நம்மை அறியாமல் குறட்டை வருவதாகவும், குறட்டை விட்டு துாங்குவது தான், ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் என்றும் நினைக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு விஷயங்களுமே உண்மையல்ல.
சொல்லப் போனால், குறட்டை விடுவது ஒரு நோய் தான். இவர்கள், ஆழ்ந்த துாக்க நிலைக்குப் போகாமல், நினைவுகளும், துாக்கமுமாக அசவுகரியமான நிலையில் துாங்கிக் கொண்டிருப்பர். குறட்டை விடுபவர்களை, இரவு நன்றாக துாங்க வைக்க வேண்டும்; இது தான், குறட்டைக்கான அடிப்படை தீர்வு.
ஒருவேளை அவர்கள், இரவு நிம்மதியாக துாங்கவில்லை எனில், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரிய சைஸ் நாக்கு, தொண்டைப் பகுதியில் அடைத்து, குறட்டை ஏற்படுத்தலாம் அல்லது ஒழுங்கற்ற பல் வரிசை கீழ் தாடை உள்ளே போயிருப்பது...
மூக்கு எலும்பு வளைந்தோ அல்லது விலகியோ இருப்பது, சைனஸ் இருப்பது, அன்ன சதைப் பகுதிகளின் அதீத வளர்ச்சி என, இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். இதில், எது உங்கள் குறட்டைக்கு காரணம் என, முதலில் கண்டறிய வேண்டும்.தவிர, சிறிய கழுத்து கொண்டவர்கள் மற்றும் உடம்பில் அதிக கொழுப்பு உடையவர்களுக்கும், இந்த குறட்டைப் பிரச்னை இருக்கும். குறட்டை விடுபவர்களில் பலர், மூச்சை மூக்கு வழியாக உள்ளிழுத்து, வாய் வழியாக வெளியில் விடுகின்றனர். இதனால், வாய் சீக்கிரம் உலர்ந்து விடும்.
முதலில், பிரச்னையின் காரணத்தை, என்டோஸ்கோபி மூலம் கண்டறிய வேண்டும். குறட்டைக்குத் தீர்வு, கட்டாயம் ஆப்பரேஷன் அல்ல. நம் வாழ்வியலை மாற்றினாலே, குறட்டை சரியாகிவிடும். உதாரணமாக, உடல் எடையைக் குறைக்க வேண்டும்; உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள், போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்; மது அருந்துபவராக இருந்தால், அதை முதலில் நிறுத்த வேண்டும்.
மூக்கு வழியாக மூச்சு விட, நேசல் டிராப்சை சிலர் பயன்படுத்துவர். ஆனால், அதுவே பழக்கமாக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கு எளிமையான ஒரே வழி, மூக்கு இரண்டையும், சற்றே விரல்களால் இழுத்துப் பிடித்து, மூச்சை உள்ளிழுத்து, வெளியில் விட்டுப் பாருங்கள். எந்தவித சிக்கலும் இல்லாமல் நன்றாக இருக்கும். 
உங்களின் மூக்கை இழுத்துப் பிடிக்க, எளிமையான சின்ன டிவைசும் இருக்கிறது. அதை மூக்கில் வைத்து, செட் செய்தால் போதும். இதற்கு, மூக்கில் சின்னதாக ஒரு டியூப் போடுவது, பிளாஸ்டர் போடுவது, டைலைட்டர் என, பல வழிகள் உண்டு. இதைச் செய்த அன்றே, உங்களுக்கு சுவாசத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், அதே நேரம் குறட்டையையும் ஓட ஓட விரட்ட முடியும்.

Saturday, March 4, 2017

Maruthuva Ariviyal Malar March Article 2017